உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும் உதவும் நன்னாரி வேர்

உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும் உதவும் நன்னாரி வேர்

ஒரு பொருளின் பெயரிலேயே அதன் சிறப்பைப் புதைத்து வைத்திருப்பது சித்த மருத்துவத்தின் மகத்துவங்களில் ஒன்று. ‘நல்ல + நாரி’ என்று பிரித்தால் பொருள் தரும் நன்னாரி, நம்மை அவதிப்படுத்தி வரும் பல்வேறு நோய்களையும் போக்கவல்லது. எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் நன்னாரி, இந்தியா முழுமையிலும் தானே வளர்கிற கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம். ஒரு மரத்தைச் சுற்றியோ, நிலத்தில் படர்ந்தோ வளரும் தன்மை கொண்டது நன்னாரி. மழைக்காலங்களில் மிகுதியாகக் காடுகளில் காணப்படும். இதன் இலைகள் மெலிந்தும் நீண்டும் இருக்கும். இலையை ஒடித்துப் பார்த்தால் பால் சுரப்பு இருக்கும்.

ஆடி, ஆவணி மாதங்களில் கொத்துக் கொத்தாக வெண்மை மலர்கள் பூத்திருக்கும். இந்தக் கொடியின் பச்சை வேர் சற்று இனிப்பும் நறுமணமும் கொண்டது. உலர்ந்த பின்னரும் இதன் நறுமணம் அகலாது.வெண்மை நன்னாரி, கருமை நன்னாரி என இரு விதமாகக் கிடைத்தாலும், இரண்டுமே ஒரேவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டவைதான். ‘நறுநெட்டி’, ‘பாதாளமூலி’, ‘பாற்கொடி’, ‘நீறுண்டி’ என்று பல பெயர்களில் மருத்துவர்களால் அழைக்கப்படும் நன்னாரியில் பல வகைகளும் உள்ளன. நாட்டு நன்னாரி, சீமை நன்னாரி, பெரு நன்னாரி, சிறு நன்னாரி எனவும் பல வகைகள் உள்ளன! நன்னாரியின் தாவரப்பெயர் ‘Hemidesmus indicus’. இந்தியாவைச் சேர்ந்த மூலிகை என்ற அர்த்தத்தால் ‘Indian sarsaparilla’ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

வடமொழியில் ‘ஸ்வேத ஸாரிவா’, ‘அனந்த மூலா’, ‘கோபி’, ‘கோபா’, ‘கோபகன்யா’, ‘கோபவல்லி’, ‘கோபசுதா’, ‘கிரிஷ்ஷோதர்’, ‘கபூரி’, ‘துக்தகர்ப்பா’ என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள்.நன்னாரியில் அதன் காய்ந்த வேர் ஆரோக்கியத்தையும் உடல் பலத்தையும் அதிகரிக்கவல்லது. உடலின் கழிவுகளை வெளியேற்றும் வண்ணம் சிறுநீரையும் வியர்வையையும் பெருக்க வல்லது. சித்த, ஆயுர்வேத முறைகளில் நன்னாரியைக் காய்ச்சி, அதோடு பசும்பாலும் பனங்கற்கண்டும் சேர்த்துக் குடிப்பதற்காகப் பயன்படுத்துவர்.

‘தீநீர்’ எனப்படும் இந்த பானம் கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, சிறுநீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவற்றை குணப்படுத்தும் திறன் கொண்டது. கிராமப்புற மருத்துவர்கள் செரிமானக் கோளாறு, பசியின்மை, அல்சர் எனும் வயிற்றுப்புண், காய்ச்சல், தோல் நோய்கள், புண்கள், வாயுவின் காரணத்தால் ஏற்பட்ட தசைப்பிடிப்பு, பெண்களுக்குக் காணும் வெள்ளைப்போக்கு ஆகிய நோய்களைக் குணப்படுத்த நன்னாரியைப் பயன்படுத்துவர்.

நன்னாரியைத் தீநீராக்கிக் குடிப்பதால் ரத்தம் சுத்தமாவதோடு பித்தமும் தணிகிறது. பித்தத்தால் உண்டான வாய்க்கசப்பைப் போக்குவதற்கு நன்னாரித் தீநீருடன் சீரகத்தையும் சேர்த்து குடிக்கப் பயன்படுத்துவதும் வழக்கம்.குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை விரைவில் குணமாக்க நன்னாரிவேர் தீநீர் தயாரித்து அதனோடு போதிய பாலும் வெல்லமும் சேர்த்து கொடுக்கலாம். இது பாதுகாப்பானது. பக்க விளைவுகள் ஏதும் இல்லாதது, செலவிலும் குறைவானது. சுவையாக இருக்கும் என்பதால் பிள்ளைகளும் மறுக்காமல் பருகிவிடுவார்கள். நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் நன்னாரி சர்பத்தும் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியதே.

நன்னாரியில் எண்ணற்ற மருத்துவப் பலன்கள் கிடைக்கிறது. ரத்தத்தைத் தூய்மைப் படுத்தவும், ஆண், பெண் என இரு பாலருக்கும் உண்டாகும் வெள்ளை ஒழுக்கு போன்ற பால்வினை நோய்களையும் குணப்படுத்தவல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் போதாத நிலையில் நன்னாரி தீநீர் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும். வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மூட்டுவலிகள், காய்ச்சல் என பல நோய்களை தணிக்கக் கூடியது. நீண்ட நாளாக உடல்நலமின்றி வாடியவர்களுக்கு சிறந்த உடல் தேற்றியாகவும் நன்னாரியைப் பயன்படுத்தலாம்.

தோலின் மேற்புறத்தில் ஏற்படும் நிறமிக்குறைபாடான வெண்புள்ளிகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் நன்னாரி பயன்படுகிறது. ரத்தத்தைக் கட்டுப்படுத்தவும், புண்களை ஆற்றவும் நன்னாரிக்கு சக்தி இருப்பதால் ஆசன வாயினிலிருந்து ரத்தம் வெளியாகச் செய்கிற ரத்த மூலநோய் குணமாவதற்கும் நன்னாரி தீநீர் பயன்படும். ரத்தம், சீதம் ஆகியவை கலந்து வயிற்றைக் கடுமையாக வலிக்கச் செய்து வெளியாகிற சீதபேதியும் நன்னாரியைப் பயன்படுத்துவதால் குணமாகும்.

நன்னாரி வேரினின்று எடுக்கப்படும் வேதிப்பொருட்கள் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. குறிப்பாக தொழுநோயைத் தணிக்கக்கூடிய மருத்துவ குணம் நன்னாரியில் உள்ளது. வெயில் காலத்தில் நம்மை வதைக்கும் பல்வேறு நோய்களுக்கு எளிதான மருந்தாக நன்னாரி விளங்குகிறது. நம் முன்னோர் சொன்னபடி இப்போதும்கூட நன்னாரியை நீரில் இட்டுக் காய்ச்சி, அதனுடன் வெல்லம், எலுமிச்சைச் சாறு கலந்து கோடைக் காலங்களில் சர்பத்தாக பயன்படுத்தினர். இதுதான் ‘நன்னாரி சர்பத்’ என்ற பெயரில் கடைகளில் விற்கப்படுகிறது.

கோடைக்கால வெயிலையும் அதன் தாக்கத்தையும் நாம் எதிர்கொள்ளும் விதத்தில் நாட்டு மருந்துக்கடைகளில் விற்கக்கூடிய நன்னாரி வேர்க்கட்டைகளை வாங்கி வந்து வைத்துக்கொண்டு ஒரு பானையில் நீர் ஊற்றிச் சில நன்னாரித் துண்டுகளை போட்டு வைத்தால் நல்லதோர் குடிநீராக நமக்குக் கிடைக்கும். இது உடல் வெப்பத்தைக் குறைப்பதோடு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட துன்பங்களையும் போக்குவதாக அமையும்.

நன்னாரியை நீரில் இழைத்து மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால் உடல்வலி போகும். உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும் உதவும். நன்னாரி வேர் மலச்சிக்கலை போக்கக்கூடிய மருத்துவ குணங்களும் பொருந்தியது. மேலும், இரைப்பையைச் சேதப் படுத்தும் அமிலத் தன்மையையும் குறைப்பதோடு ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் நன்னாரி உதவுகிறது.இதனுடன் ஈரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கத்தைக் குணப்படுத்தக் கூடியது. ஆஸ்துமா, ரத்தசோகை, மூட்டுவலி, சரும நோய்களைப் போக்கவல்லது. தினமும் நன்னாரி சர்பத் சாப்பிடுவதால் தாம்பத்தியத்தில் ஆண்களுக்கு ஏற்படும் தாம்பத்தியக் குறைபாடு, உயிரணுக் குறைபாடு விலகும். இப்படி பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்த நன்னாரியை நோயாளிகள் மட்டுமின்றி நோய்த்தடுப்புக்காக மற்றவர்களும் பயன்படுத்துவது சிறந்தது.

Rates : 0

Loading…