கை கால் வீக்கத்தை சரிசெய்யும் உப்பிலாங்கொடி

கை கால் வீக்கத்தை சரிசெய்யும் உப்பிலாங்கொடி

தோட்டத்தில், சாலையோரம் உள்ள மரங்களில் படர்ந்திருக்கும் உப்பிலாங் கொடி, தடிமனான முட்டை வடிவில் இருக்கும். தமிழில், ‘உப்பிலி’ என்று அழைக்கப்படும். உப்பு, உப்புசம் இல்லாத கொடி என்று இதற்கு பெயர் உண்டு. குழந்தைகளுக்கு மந்தம் இருக்கும்போது, குழந்தையின் இடுப்பை சுற்றி கட்டி வைப்பதால், உப்புசம் இல்லாமல் போகும். இது நோய் எதிர்ப்பு சக்திமிக்கது.

உடைத்தால் உடையக் கூடிய இந்த உப்பிலாங் கொடியில் நீர்சத்து அதிகம். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத்தை போக்கும். உப்பிலாங் கொடியை வதக்கி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சாற்றில், காய்ச்சிய பசும்பால் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். அதனுடன் கற்கண்டு பொடி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைக்கு கொடுத்துவந்தால் மந்தத்தினால் ஏற்படும் கழிசல், உப்புசம் சரியாகும்.

உப்பிலாங் கொடி இலை, ஒரு சிட்டிகை சுக்குப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கி கொதிக்க வைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் உப்பினால் ஏற்படும் கை, கால்களில் வீக்கம், உடல் சோர்வு சரியாகும். சாலையோரம் கிடைக்கும் உப்பிலாங்கொடியை சேகரித்து வைத்து கொண்டு அதை பயன்படுத்தலாம். கொடியை உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். உப்பிலாங்கொடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது.

பூஞ்சை காளான் போக்கவல்லது. சீழ் பிடிக்காமல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்துகள் பெரும்பாலும் பக்கவிளைவை ஏற்படுத்த கூடியவை. ஆனால் இதில் பக்கவிளைவு கிடையாது. வயிற்றுப்போக்கை சரி செய்யும், உடல் வலியை போக்கும் தன்மை கொண்டது. உப்பிலாங்கொடி இலையுடன் பெருங்காயம், சுக்கு சேர்த்து தேனீராக்கி இனிப்பு சேர்த்து குடித்தால் கை கால் வலி, வீக்கம், உடல் சோர்வு சரியாகும். மூட்டுவலி குறையும். அதிகளவிலான உடல்சோர்வு, காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து.

மூட்டுவலிக்கு மேல்பத்தாகவும் இதை பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய்யுடன் இலையை வதக்கி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் வலி சரியாகும்.கால் ஆணி, மருக்களை போக்கும் தன்மை கொண்டது. உப்பிலாங் கொடி இலைசாறு, சம அளவு நல்லெண்ணை, மஞ்சள் பொடி சேர்த்து தைலபதத்தில் காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். இதை பாட்டிலில் வைத்துகொண்டு கால் ஆணி, மருக்கள் உள்ள இடங்களில் பூசலாம். தோலின் மேல் பகுதியில் ஏற்படும் தொல்லைகள், மருக்கள் ஆகியவற்றை சரிசெய்யும் உப்பிலாங்கொடி, வேர்க்குருவை போக்கும் தன்மை கொண்டது.

Rates : 0

Loading…