வாத நோய் போக்கும் நன்னாரி

வாத நோய் போக்கும் நன்னாரி

அங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள முளி, கோபாகு, சாரிபம், பாறட்கொடி, நீறுண்டி, சாரியம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நன்னாரி நமது உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை அகற்றி பல்வேறு வெப்ப நோய்களையும் நீக்குகிறது. நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சர்பத்துதான். இதன் மனத்திற்கும் சுவைக்கும் ஆட்படாதவர்களே இல்லை என்று கூறலாம்.

அதுவும் கோடைகாலத்தில் சில் என்று அதை குடிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனியானது. எதிரடுக்கில் நீண்ட இலைகள் கொண்டது. இதன் கொடிகம்பி போன்று அமைந்திருக்கும். மணம் வீசும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தானாகவே வளரும் பாலுள்ள கொடி இனம். நறுக்குமூலம்,நறுநீண்டி, தாதுவெப்ப அகற்றியாகவும் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும் மருந்தாகவும் நோயகற்றி உடல் தேற்றவும் உடல் உரமூட்டவும் பயன்படும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது சில ஆண்களுக்கு எரிச்சல் ஏற்படும். இவர்கள் நன்னாரி வேரை 15 கிராம் அளவில் எடுத்து 500 மிலி தண்ணீரில் நசுக்கி போட்டு 250 மிலியாக சுண்டியதும் வடிகட்டி 50மிலி அளவில் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வர எரிச்சல் நீங்கி முழுமையான குணம் ஏற்படும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மிலி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மே வெட்டை, நீர் கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாட்கள் இதை சாப்பிட்டு வர நரை முற்றிலும் மாறும். பச்சை வேரை சிதைத்து 20 கிராம் எடுத்து 200 மிலி தண்ணீரில் ஒரு நாள் ஊற போட்டு வடிகட்டி 100 மிலி வீதம் காலை மாலை குடித்து வர பித்தநோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டை சூடு, கிரந்தி, சொறி சிரங்கு, தாகம், மிகுபசி, மேகநோய் தீரும். இச்சாபத்தியம் உண்டு.

நன்னாரி வேரை குடிநீர் செய்து இளம் சூட்டில் 100மிலி அளவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். நன்னாரி சர்பத்தாகவும் குடிக்கலாம். நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி 100 மிலி வீதம் காலை மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம். பாரி சவாதம், தோல் நோய்கள் நீங்கி குணமடையும். பித்த குன்மம் முற்றிலும் நீங்கும்.

நன்னாரி வேரை இடித்து 135 கிராம் எடை எடுத்து அதனுடன் 700 மில்லி வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 1 கிலோ அளவில் சீனியை சேர்த்து சிறு தீயில் காய்ச்சி வைத்துக் கொண்டு வேளை ஒன்றுக்கு 2 தேக்கரண்டி வீதம் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெப்பம் தணியும். நன்னாரி வேரை வாழை இலையில் சுருட்டி பொட்டலாமாக கட்டி அதை கும்பிசாம்பலில் புதைத்துவைத்து மறுநாள் எடுத்து நன்னாரி வேரில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, வெல்லம், சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து உண்டு வந்தால் நீர் சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

வேர்சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணெயில் வைத்து சாப்பிட ஆரம்ப குஷ்டம் தீரும். சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிட காமாலை நீங்கும். நன்னாரியை பொடி செய்து சம அளவு கொத்துமல்லியைத் தூள் செய்து கொதிக்க வைத்து வடி கட்டி இளம் சூட்டில் அருந்தினால் பித்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். வயிறு, குடல் முதலியவற்றில் உண்டாகும் நோய்கள் நீங்கும்.

‘சலதோடம் பித்த மதிதாகம் உழலை
சலமேறு சீத மின்னார் தஞ்சூ-டுலக மதிற்
சொன்ன மதுமேகம் புண் சுரமிவையெலா மொழிக்கும்
மென் மதுர நன்னாரி வேர்’

கடுமையான ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டு வருபவர்கள் நன்னாரிவேர், அதிமதுரம், கோட்டம், வசம்பு, கரு நெய்தல், இவற்றை காடி விட்டரைத்து எண்ணெய் கலந்து பூசி வர தலைவலி நீங்கும். வேரை அரைத்து சோற்றுக் கற்றாழையின் சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் கடுமையான வண்டு கடி நஞ்சு போகும். வேரை அரைத்து பற்று போட்டால் மூட்டுவலி, கட்டி, புண் ஆகியவை நீங்கி குணமடையும்.

நோஞ்சான் குழந்தையாக இருப்பவர்களுக்கு நன்னாரி வேர் பட்டையை நீரில் ஊற வைத்து தேவையான அளவு பாலும் சர்க்கரையும் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடலை தேற்றும் நாட்பட்ட இருமல் நிற்கும். கழிச்சலும் நீங்கும். என்கின்றார் தேரையர் . தாகம் தீர்க்கும் நன்னாரி நமது உடலுக்கு எந்த வகையில் நன்மை செய்யும் என்பதை அறிந்து, தேவையானவற்றை பயன்படுத்தும் முறையை நமக்கு சொன்ன முன்னோர்கள் வழியில் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

Rates : 0

Loading…