புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள்

புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள்

மூளையின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருட்கள் என சில பொருட்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின், ஆல்கஹால், கபைன், பாக்கு போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் வருகின்றன.

தொன்மைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சுண்ணாம்பைக் கொதிக்கவைத்து அதில் பேகிங் பவுடர், மண்எண்ணெய், பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப்பார்கள்.

இது லேகியப் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் போட்டு விற்று விடுகிறார்கள். ஆக, புகையிலையினால் மட்டுமல்லாமல், அதனுடன் சேர்க்கப்படும் மற்ற வேதிப்பொருட்களும் சேருவதால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்து கிறது. அதுமட்டுமல்ல உடல், மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது.

புகையிலைப் பொருட்களைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அந்த வகை போதைப் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும், நாளடைவில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும். இதனால், பணிபுரியும் இடங்களில் எரிச்சல், மற்றவர்கள் மீது கோபம், பணியில் கவனமின்மை ஏற்படும்.

புகையிலைப் பழக்கத்தால் வாயில் ஒருவகைக் கட்டி ஏற்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவரின் வாயில் நீர் வறட்சி ஏற்படும். தாடைகள் இறுக்கமடைந்து வாயின் இயல்பான அசைவுகள் தடைபடும். இதனால் ஒருகட்டத்தில் வாயைத் திறக்க சிரமப்படுவார்கள். மேலும் பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அல்லது அழுகிப்போக நேரிடும்.

இது வாய்ப்புற்று நோயின் ஆரம்ப நிலையாகும். இதன் தொடர்ச்சியாக வாய்ப்புற்று நோய் ஏற்படும். சிகரெட், குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும். அதனால் புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

Rates : 0

Loading…