கொழுப்புக்களை எளிதில் கரைத்து கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபட

கொழுப்புக்களை எளிதில் கரைத்து கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபட

உடலிலேயே கல்லீரல் தான் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடும் உறுப்பாகும். இந்த கல்லீரலில் ஏதேனும் காயங்கள் அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டால், அதன் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். ஒருவரது கல்லீரலின் சீரான இயக்கத்தில் இடையூறு ஏற்பட்டால், அந்த நபருக்கு கல்லீரல் நோய் உள்ளது என்று அர்த்தம்.

உடலில் உள்ள கல்லீரல் சர்க்கரை, கொழுப்பு மற்றும் இரும்புச்சத்தை வளர்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் கல்லீரல் பித்த நீரை உற்பத்தி செய்து, கொழுப்புக்களை கரைக்கும். மேலும் இது புரோட்டீன் உற்பத்தி மற்றும் இரத்த உறைவு காரணிகளின் உற்பத்தியிலும் ஈடுபடுகிறது.

ஒருவருக்கு கல்லீரல் நோய்கள் இருந்தால், சோர்வு, உடல் பலவீனம், எடை குறைவு, குமட்டல், வாந்தி, மஞ்சள் நிற சருமம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

கல்லீரலில் உள்ள 75%-த்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், கல்லீரலின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக கல்லீரல் சேதமடைந்த திசுக்களை எளிதில் மீண்டும் உருவாக்கும். ஆனால் 75 சதவீதத்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும்.

பொதுவாக சில வகை கல்லீரல் நோய்களை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்துவிடலாம். இங்கு கல்லீரல் நோய்களை எளிதில் சரிசெய்ய உதவும் இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் சீடர் வினிகர்
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை என குடித்து வர, கொழுப்புக்கள் எளிதில் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

டேன்டேலியன் வேர் டீ
இந்த டீ ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவும். ஆகவே கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் டேன்டேலியன் வேர் பொடியை வாங்கி, தினமும் 2 வேளை டீ தயாரித்து குடியுங்கள். வேண்டுமானால் டேன்டேலியன் வேரை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

நெல்லிக்காய்
நெல்லியில் உள்ள வைட்டமின் சி, கல்லீரல் செயல்பாட்டை சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவும். ஆய்வுகள் நெல்லிக்காயில் கல்லீரல் செயல்பாட்டைப் பாதுகாக்கும் உட்பொருட்கள் இருப்பதாக நிரூபித்துள்ளன. எனவே கல்லீரல் நோய்களில் இருந்து விடுபட தினமும் 4-5 நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

அதிமதுரம்
அதிமதுரப் பொடியை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, தினமும் 1-2 முறை குடித்து வர, கொழுப்பு கல்லீரல் பிரச்சனை நீங்கும். இந்த வழியானது ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் ஒன்றாகும்.

மஞ்சள்
மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளன. இது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், ஹிபடைடிஸ் பி மற்றும் சியை உண்டாக்கும் வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. எனவே அன்றாட சமையலில் மஞ்சளை சேர்ப்பதோடு, தினமும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதாலும் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆளி விதை
கல்லீரல் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதால், அதில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருக்கும். இந்த அழுக்குகளை வெளியேற்றி, கல்லீரலின் இயக்கத்தை ஆரோக்கியமானதாக்க ஆளி விதையை வறுத்து அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஸ்நாக்ஸ் நேரத்தில் அதை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுங்கள்.

பப்பாளி
2 டீஸ்பூன் பப்பாளி ஜூஸ் உடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை குடித்து வர, கல்லீரல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.

பசலைக்கீரை மற்றும் கேரட்
1/2 டம்ளர் பசலைக்கீரை ஜூஸ் உடன் 1/2 டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்து கலந்து, தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு டம்ளர் என குடித்து வருவதால், கல்லீரல் அழற்சியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

அவகேடோ
அவகேடோ பழ மில்க் ஷேக்கை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள க்ளூட்டதியோன், கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி சுத்தமாக இருக்கும்.

வால்நட்ஸ்
வால்நட்ஸில் இருக்கும் உட்பொருட்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கல்லீரல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், ஸ்நாக்ஸ் நேரத்தில் சிறிது வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்
ஆப்பிளில் இருக்கும் பெக்டின், கல்லீரல் மற்றும் செரிமான பாதைகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, அப்பகுதிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்
கீரை, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் கல்லீரலில் பித்தநீரின் உற்பத்தியைத் தூண்டி, கொழுப்புக்களை எளிதில் கரைக்க உதவி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மதுவைத் தவிர்க்கவும்
கல்லீரல் ஆரோக்கியமாக நோய்களின்றி இருக்க வேண்டுமானால், முதலில் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மதுவில் உள்ள உட்பொருட்களே கல்லீரலுக்கு உலை வைத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

ப்ளூரைடு இல்லா நீர்
தினமும் போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். அதுவும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் ப்ளூரைடு இல்லாத நீரை குடிக்க வேண்டும். இதனால் கல்லீரலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தினமும் தவறாமல் 10-12 டம்ளர் நீரைப் பருகுங்கள்.

உடற்பயிற்சி
ஒருவர் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உணவு செரிமானம் முறையாக நடைபெற்று, உடலில் இருந்து கொழுப்புக்கள் சரியாக வெளியேற்றப்படும். மேலும் உடற்பயிற்சியை செய்வதால், டாக்ஸின்களானது வியர்வையின் வழியே வெளியேறி, கல்லீரலில் அழுக்குகள் அதிகம் தேங்குவதைத் தடுக்கும். எனவே தினமும் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள அதிகளவிலான கேட்டசின்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும். எனவே கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் 3-4 கப் க்ரீன் டீயைக் குடிக்க நல்ல பலனை விரைவில் காணலாம்.

Rates : 0

Loading…